வருடக் கணக்காக ஆகிறது இப்படி அதிகாலையில் வரும் அடைமழையை நான் ரசித்து. மனதுக்கு வயது ஆக ஆக இப்படிப்பட்ட அற்புதமான விஷயங்களை ரசிக்க மறந்து விடுகிறதோ?
இன்றைய காலைப் பொழுது என்னை ஆச்சரியப் படுத்தியது. 6.15 மணிக்கு எழுந்து பார்த்த போது எப்போதும் போல சுள்ளென்று அடிக்கப் போகும் சூரியனுக்காகத் தயாரான மாதிரி பளீரென்று இருந்தது போல் நினைவு. ஆனால் 7.30 மணிக்கு இப்படி இடியுடன் கூடிய மழை. ஒரு மணி நேரத்துக்குள் எவ்வளவு பெய்ய முடியுமோ அவ்வளவும் பெய்து விட வேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்தது போலும் வானம்.
எதிர்பாராத மழை கொண்டு வரும் ஆச்சரியங்கள்தான் எப்படிப்பட்டவை!... பள்ளிக் காலங்களில் இப்படிப்பட்ட திடீர் அதிகாலை மழை 'இன்று பள்ளிக்கு விடுமுறையாய் இருக்கலாம்..' என்ற குதூகலத்தைக் கொடுத்திருக்கிறது. கல்லூரி நாட்களில் மழையில் நனைந்தவாறே மிதிவண்டியில் ஐந்து கிலோமீட்டர் பயணித்து மழை நின்றதும் நண்பர்களுடன் மீண்டும் வீடு திரும்பிய சந்தோஷ தருணங்களைக் கொடுத்திருக்கிறது. விடுமுறைக் காலங்களில் கண் விழிக்கும் போது பெய்து கொண்டிருக்கும் மழை இன்னும் சோம்பலை அதிகமாக்கும். போர்வையோடு வாசலுக்கு வந்து என் பூனைக்குட்டியும் நானும் உரசியவாறு உட்கார்ந்து மழையை ரசிப்பதுண்டு.
பாட்டி வீட்டில் இருக்கும் நாட்களென்றால் இன்னும் சுகம். பல் தேய்த்து முகம் கழுவும் வேலையை மட்டும் சம்பிரதாயமாய்க் கருதி செய்து முடித்து விட்டால் சூடாகப் பால் குடித்து சிறிது நேரத்தில் பொரியரிசி, வறுத்த பயறு, சில சமயங்களில் முறுக்கு, இன்னும் அந்த சமயத்தில் தயாரிக்க முடிந்த நொறுக்குத் தீனி (நடுவில் சூடான இட்லி வேறு - காலை உணவாம்!..)... இப்படி ஒன்று முடிந்தால் அடுத்தது என்று வந்து கொண்டே இருக்கும்.
மழையை ரசிக்க குழந்தை மனமுடைய நண்பர்களும் அருகில் இருந்தால் இப்போது வசதியாக இருக்கும் என்று தோன்றுகிறது. அக்காவும், அண்ணனும் இருந்தால் சிறு வயது கதைகள் பேசலாம். என்னை விட வயது சற்றே குறைவானாலும் என் கூட விளையாடிய பின் வீட்டு ஜேன், ஷெரின் இருந்தால் பேப்பர் கப்பல் விட்டு கை கொட்டி சிரித்து நேரம் போவது தெரியாமல் இருக்கலாம். பள்ளிக் கூடத்தில் என் வகுப்பறையில் இருந்தால் நனைந்த சீருடையால் நடுங்கும் உடலுடன் எப்போது விடுப்பு அளித்து வீட்டுக்கு அனுப்புவார்கள் என்று நண்பர்களுடன் காத்திருக்கலாம்.
கல்லூரியிலிருந்து சிறு தூரலில் நனைந்தவாறே வீடு திரும்பும் பொழுது என்றால் நண்பர்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல சொல்ல தைரியமும் ஆசையும் உள்ள யாராவது ஒருவரையும் கூட சேர்த்துக் கொண்டு சாக்லெட் ஐஸ் அல்லது மாங்கோ ஐஸ் வாங்கிக் குச்சியை ஒரு கையில் பிடித்து சுவைத்தவாறு இன்னொரு கையில் சைக்கிள் ஓட்டலாம்.
குறைந்த பட்சம் அப்பாவிடம் திட்டு வாங்கிய படி (நாளைக்கு எக்ஸாம் இருக்கு.. படிக்கறதை விட்டுட்டு வேடிக்கை பாரு... நல்லா மார்க் வாங்கிடலாம்....) ஜன்னல் வழியே மழையை வேடிக்கை பார்த்து அம்மா பார்க்காத நேரம் மழைத் தண்ணீரில் கை நனைத்து விளையாடவாவது செய்யலாம் .....
பார்ப்போம்... வயதான காலத்தில் ரிட்டயர் ஆன பிறகாவது மீண்டும் மழையை ரசிக்க மனதும் நேரமும் சேர்ந்து அமைகிறதா என்று!....

