வெள்ளி, 29 ஜூலை, 2011

பகற் கொள்ளை

சில காலத்துக்கு முன் தண்ணீர் தட்டுப்பாட்டுக்குப் பெயர் போன சென்னையில் வாழும் மக்களே இப்போது தண்ணீர் தாராளமாக வருவதால் குழாயைத் திறந்து விட்டு விட்டு வேறு வேலையைப் பார்க்கிறார்கள், நிரம்பி வழியும் தண்ணீர் வீணாவதைப் பற்றிய கவலையின்றி.

முன்னாளில் எல்லாம் பேசும் போது 'பணத்தைத் தண்ணீர் மாதிரி செலவு செய்யறான்', 'அவனுக்கு இதெல்லாம் தண்ணீர் பட்ட பாடு' என்று சொல்லுவார்கள். அடுக்குமாடிக் குடியிருப்புகளும், உலக மயமாக்கப்பட்ட, சந்தைப் படுத்தப்பட்ட வாழ்க்கைமுறையும் வந்த பின்பு தண்ணீர் சிக்கனம் என்ற வார்த்தை தேவையற்றதாகவும், பணம் படைத்தவர்களின் வாழ்க்கைத் தரத்துக்கு ஒவ்வாததாகவும் கருதப் படுவது வேதனையையும் எதிர்காலம் பற்றிய பயத்தையும் தருகிறது.

'நிழலின் அருமை வெயிலில் தெரியும்' என்று என்றோ சொன்ன தமிழன் வாழ்க! ஒரு பொருள் நம்மிடமிருந்து பறிக்கப் படும் போதுதான் அதன் தேவை நமக்குத் தெரியும். நான் என் பள்ளிக் காலத்தில் 'கணையாழி' இதழில் ஒரு சிறுகதை படித்தேன். என் வாழ்வில் மறக்க முடியாத கதை. ஆசிரியர் யார் என்று கூட நினைவு இல்லை.

அன்று பொழுது விடிந்து வெகுநேரம் ஆகியும் சூரியனைக் காணவில்லை. மதியத்திலாவது வந்துவிடும் என்று எதிர் பார்த்து மதியமும் கழிந்தது. மேகமூட்டமாகக்கூட இல்லாதது சற்றே வித்தியாசமாய் இருந்தாலும், எல்லோருக்கும் வெயிலின் கொடுமையிலிருந்து தப்பித்த சந்தோஷத்தோடு முடிந்தது அன்றைய தினம்.

அடுத்த நாள் விடிந்தது இன்று வழக்கம் போல வெய்யில் காயப் போகிறது என்ற நம்பிக்கையில். பிற்பகல் ஆகியும் சூரியனைக் காணவில்லையே என்றதும் சிலருக்குக் கவலை வந்தது. மூன்றாவது நாளாய் அன்று சூரியனைக் காணாமல் சிலர் பயப்பட ஆரம்பித்த போது மீதிப் பேர் சொன்னார்கள், "என்ன இது?.. எங்கே போய் விடப் போகுது சூரியன்? " நான்காவது நாளாய் சூரியனைக் காணவில்லை. எல்லோருக்கும் கவலை வந்துவிட்டது. ஐந்தாவது நாளாய் சூரியனைக் காணாமல் அனைவரும் பதற ஆரம்பித்தனர், "ஐயோ.. யாரிடம் கேட்பது...யாராவது ஏதாவது செய்யுங்களேன்.." ஆறாவது நாள் பலர் கவலை, குழப்பம் காரணமாக நோயுறும் நிலைமையும் வந்தது.

இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துப் போனது. அலுவலகங்கள், பள்ளிகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், போக்குவரத்து, மருத்துவமனைகள் எல்லாமே இயக்கமற்றுப் போயின. எல்லோர் மனதிலும் ஒரே எண்ணம் 'சூரியனுக்கு என்ன ஆயிற்று?'. மேலும் ஒரு நாள் கழிந்தது. 'ஐயோ.. சூரியன் இல்லாவிட்டால் வாழ்க்கை இல்லை போலிருக்குதே!....' மேலும் ஒரு நாள் சூரியன் இல்லாதது அதை உறுதிப் படுத்தியது. 'இதற்கு மேல் சூரியன் இல்லாமல் சமாளிப்பது கஷ்டம்'.

அடுத்த நாள் காலை, லேசாக முகம் காட்டிய சூரிய வெளிச்சம்.... ஊரெல்லாம் கோலாகலம்...... சற்று நேரம் கழித்து வெளியில் வந்தே விட்டது சூரியன். உயிர்த்தெழுந்தது ஊர். நோய், கவலை, குழப்பம் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு கட்டியது சூரியனின் வருகை. அன்று முழுவதும் எல்லோர் முகத்திலும் பூரிப்பு, 'சூரியனின் கருணை' பற்றியே பேச்சு, 'இனி கவலை இல்லை, சூரியன் வந்தாயிற்று, நம் வாழ்க்கை காப்பாற்றப் பட்டது'. அடுத்த நாள் விடிந்தது சூரியனுக்கு நன்றி தெரிவித்தலோடு. எல்லோரும் மகிழ்ச்சியோடு புறப்பட்டனர் தங்கள் வேலைகளைப் பார்க்க.


அடுத்த நாள் காலை 'சூரியன் வந்து விட்டதா, நல்லது'... அடுத்த நாள், "ஐயோ.. இத்தனை நாள் இந்த சூரியன் வராததால் வேலை எவ்வளவு சேர்ந்து கிடக்கிறது?... ச்சே...." அடுத்த நாள் சூரியன் வந்ததா என்று பார்க்கக் கூட யாருமில்லாமல் வேலைப்பளு. அதற்கப்புறம் வந்த நாட்களில் சூரியனைப் பற்றி நினைப்பதற்கு யாருக்கும் நேரம் இல்லை.

 இப்படி முடிந்திருக்கும் அந்தக் கதை. கதையின் தலைப்பு "பகற்கொள்ளை".

வியாழன், 28 ஜூலை, 2011

அடி பைப்பு

அடி பைப்பு என்றால் எதைக் குறிக்கும் என்று இன்றைய 'செல் ஃபோன் தலைமுறை'க்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அதிலும் சென்னை போன்ற பெருநகர வாசிகளுக்கு. கிராமங்களில் இன்னும் இந்த வார்த்தை புழக்கத்தில் உள்ளதா என்று தெரியவில்லை.(நான் கிராமங்களை விட்டு வெகுதூரம் வந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது) ஏனென்றால், கிராமங்களில் இப்போது 'அடி பைப்பு' இல்லை என்றே நினைக்கிறேன்.

பள்ளி விடுமுறையின் போது  கிராமத்தில் இருக்கும் என் பாட்டி வீட்டுக்குப் போகும் ஒவ்வொரு முறையும், சிறு பிள்ளைகள் எல்லோருக்கும் வீட்டின் எதிரில் இருக்கும் அந்த அடி பைப்பில் நீரில் விளையாடுவது எவ்வளவு மனதுக்குகந்த ஒரு விளையாட்டாக இருந்தது என்பதைப் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் நல்ல தண்ணீருக்காக ஒவ்வொரு தெருவிலும் ஒரு அடி பைப்பு இருந்தது.(இப்போது சென்னையின் பல தெருக்களில் ஒரு தண்ணீர் குழாய்  கூட இல்லை -வழிப்போக்கர்களின் தாகம் தீர்க்க..)

வெய்யில் காலங்களில் அந்த அடி பைப்பைச் சுற்றிலும் தேங்கியிருக்கும் தண்ணீரில் படுத்து  மாடுகளோ  நாய்களோ இளைப்பாறுவதைப் பார்த்திருக்கிறேன். விடியற்காலை நேரங்களில் அடி பைப்பின் அந்த 'க்கீச்.. க்கீச்' ஒலியில் தான் பொழுது விடிந்து விட்டது என்று கண் விழித்திருக்கிறேன். தண்ணீர் மட்டம் குறைந்து விடும் உச்சி வெய்யில் காலங்களில் பைப்பின் குழாயை ஒரு கையால் பொத்தி மூடிக் கொண்டு, மேற்புறம் உள்ள துளையில் சிறிது நீர் ஊற்றிய பின் விடாமல் அடித்துத் தண்ணீர் மட்டம் மேலேறியதும் பாத்திரத்தில் நிறைத்துக் கொள்வது ஒரு தனி கலை.

என் தாத்தா குடிக்கத் தண்ணீர் கொண்டு வரச் சொல்லும் போதெல்லாம், அவருடைய பெரிய சொம்பை எடுத்துக் கொண்டு கூட விளையாடிக் கொண்டிருந்தவர்களில் யாராவது ஒருவரை உதவிக்குக் கூட்டிக் கொண்டு( "நீ பைப்பை அடி... நான் சொம்பில் தண்ணீர் பிடிச்சுக்கறேன்..") போய் 'சுடச் சுட'  பைப்பை அடித்துக் குளிர்ந்த நீரைத் தாத்தாவுக்குக் கொடுத்திருக்கிறேன்.
என் தாத்தா வளர்த்த புறாக்களில் ஒன்று, தினமும் காலையில் அந்த அடி பைப்பு தண்ணீரில் குளித்து விட்டுச் சிறகுகளை வெய்யிலில் காய வைத்து விட்டு வந்து தாத்தா குடிக்கும் காபியில் பங்கு கேட்டு குடிக்கும் என்று அம்மா சொல்லக் கேட்டு வியந்து இருக்கிறேன்.

பெரியவர்கள் யாரும் பார்க்காத நேரத்தில் ஓடிப் போய் அடி பைப்பை அடித்து தண்ணீரை மேலே ஊற்றி விளையாடி அம்மாவிடம் மாட்டிக் கொண்டு திட்டு வாங்கி தாத்தா, பாட்டி பரிந்து பேசி எங்களை அணைத்துக் கொண்ட நாட்கள் இன்னும் என் நினைவில் இருக்கின்றன.

 என் பாட்டி வீட்டில் கழித்த என் சிறு வயது நாட்களில் அந்த அடி பைப்பு ஒரு விளையாட்டுத் தோழனாகவே இருந்தது புரிகிறது. லேசாக இரும்பின் வாசம் வீசும் குளிர்ந்த அந்த அடி பைப்புத் தண்ணீரின் சுவைக்காக மனசு ஏங்கும் சில நிமிஷங்களில் நினைவு வருகிறது நெல் வயல்களின் வாசம் வீசும் அந்த கிராமத்தில் நிறைந்திருந்த அழகும் அன்பும்.

எப்போதாவது கிராமத்திலிருந்து அப்பா, அம்மாவைப் பார்க்க வரும் சொந்தங்களைப் பார்க்க நேரும் போதெல்லாம் அவர்களிடம் கேட்கிறேன், "அந்த அடி பைப்பில் இன்னும் தண்ணீர் வருதா?"


செவ்வாய், 26 ஜூலை, 2011

அரியலூர் மாணவர் ராஜவேலின் மருத்துவராகும் கனவு.....

வாரந்தோறும் புது திரைப்படங்கள் வெளியாவது போல, ஒன்று முடிந்ததும் அடுத்து அறிவிக்கப்படும் IPL cricket match போல, தினம் ஒரு அரசியல்வாதியின் மேல் ஊழல் குற்றச்சாட்டு சொல்லப்படுவது போல ஒவ்வொரு கல்வி ஆண்டு துவங்கும் போதும் இது போன்ற செய்திகள் ஊடகங்களில் வெளிப்படுத்தப் படுவதும், நாம் அதை ஒரு பெருமூச்சோடும், "என்ன பண்றது? எந்த government  வந்தாலும் கஷ்டப் படற மக்கள் கஷ்டப் பட்டுகிட்டே தானே இருக்கிறாங்க.. !.." என்ற வார்த்தைகளோடும் அவற்றை ஒரு நாளோடு மறந்து போவதும் வழக்கமாகி விட்டது நம் சமூகப்பொறுப்பின்மையையும், சுயநல மனப்பான்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

என்னாலும் வேறு ஏதும் இப்போது செய்யமுடியாவிட்டாலும் இன்று அதிரைக்காரன் ஜமால் அவர்கள் கேட்டிருப்பது போல் பதிவிடவாவது செய்கிறேன். அரியலூரைச் சேர்ந்த மாணவர் ராஜவேல் மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைத்தும் சேர முடியாமல் ஏழ்மையில் தவிப்பதற்கு யார் காரணம் என்ற பட்டிமன்றங்களைச் சற்றே தள்ளி வைத்து விட்டு இப்போது என்ன செய்ய முடியும் என்று பார்க்கலாம். முதலில் செய்தி. கீழ்க்காணும் இணைப்பில் பார்க்கவும்.







http://www.inneram.com/2011072518068/help-needs-for-a-future-doctor

இப்போது அதிரைக்காரன் ஜமால் அவர்களின் செய்தி:
மாவட்ட அளவில் மூன்றாமிடமும், பள்ளியளவில் முதலிடமும் பெற்று +2 தேர்வில் 1171/1200 மதிப்பெண்கள் பெற்றுள்ள அரியலூரைச் சார்ந்த ஓர் ஏழை கூலித்தொழிலாளியின் மகன் ராஜவேல்,மருத்துவப் பட்டப்படிப்புக்கு அனுமதி கிடைத்தும் ஏழ்மைநிலை காரணமாக இன்னொரு கூலித்தொழிலாளியாகிக் கொண்டிருப்பதாக வந்த செய்தியைத் தொடர்ந்து,தமிழிணைய பதிவர்களைத் திரட்டி,இந்த மாணவனுக்கு உதவும் நோக்கில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்தப்பதிவை நீங்களும் மீள்பதிவாகவோ அல்லது சகவலைப்பதிவர்களுக்குப் பரிந்துரைத்தோ அந்த மாணவனின் கல்விப்பயணம் தொடர்வதற்கு நம்மால் இயன்ற முயற்சிகளை செய்வோமே!

பரிந்துரைக்க வேண்டிய சுட்டி : http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html . மீள்பதிவிட முடியவில்லை எனில் உங்கள் பதிவில் நேரடியாக புதிய பதிவிட்டு அதற்கான சுட்டியை adiraiwala@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இதிலும் சிரமம் இருந்தால் http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html பதிவில் பின்னூட்டமிட்டு அறிந்தந்தாலும் மிக்க நன்றி.

தன்னார்வலர்களிடம் நிதியுதவி கோருவதைவிட, இத்தகைய மாணவர்களுக்கு அரசின் உதவியைப் பெற்றுக்கொடுப்பதே கவுரமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

மேலதிக தகவல் தேவையெனில் தயங்காமல் கேட்கவும். சாதி/மதங்கள் கடந்த இந்த உன்னதமுயற்சிக்கு உங்களின் ஒத்துழைப்பு மட்டுமே கோரப்படுகிறது.
-அதிரைக்காரன்
adiraiwala@gmail.com



ஞாயிறு, 24 ஜூலை, 2011

மர நினைவுகள்

சிறு வயதிலிருந்தே மரங்களோடு உணர்வு பூர்வமாக இணைந்திருக்கும் என்னால் உருவத்தில் பெரியதாய் இருப்பதால் மரங்களைத் தாவரங்கள் என்று அழைக்க முடிவது இல்லை. என்ன தான் அறிவியல் படித்தாலும் கடவுள் தான் தன்னைப் படைத்ததாக நம்பும் பலரைப் போல என் மனது மரங்கள் தாவர இனத்துக்குள் வகைப்படுத்தப் பட்டிருப்பதை அறிவியல் பாடத்தில் படித்திருந்தாலும் தினசரி வாழ்வில் மரங்களைத் தாவரங்கள் என்று அழைக்க மறுக்கிறது. ஏனோ தாவரம் என்ற வார்த்தை செடி, கொடிகளை மட்டுமே குறிப்பது போல் தோன்றுகிறது.

நான் முதன் முதலில் பார்த்த மரம் எது என்று நினைவில்லை. யோசித்துப் பார்த்தால் சிவந்த மலர்களை உதிர்க்கும் ஒரு பெரிய கொன்றை மரம் என்றே தோன்றுகிறது. என் கண்களுக்குள் அடக்க முடியாத அளவு பெரிய மரம். நாங்கள் வசித்த மாடிக் குடியிருப்பின் வாசற்புறம் பெரிதாய் நிழல் பரப்பியிருந்தது. நான் முதன் முதலாய் அடி வைத்து விளையாடிய மண் அதுதான். அப்புறம் அப்பா வளர்த்திருந்த சிறு தோட்டத்தில் இருந்த வாழைமரங்கள்.

என் அப்பா பிறந்த ஊரில் தாத்தா வீட்டுத் தோட்டத்தில் இருந்தது வீட்டை விடப் பெரிய அந்த மாமரம். தாழ்வாகக் கிளைகள் பரப்பி ஒவ்வொரு கோடையிலும் பழங்களால் நிறைந்து நின்ற அந்த மரத்தில் அப்பா கட்டித் தரும் கயிற்று ஊஞ்சலில் விளையாட அண்ணன், அக்காவோடு போட்டி போட்டது ஞாபகம் இருக்கிறது.

அப்புறம், அம்மா பிறந்த ஊரில், தாத்தா வீட்டு எதிரில் இருந்த பனை மரங்கள் நடுவில் விளையாட்டுத் தோழர்கள், அக்கா, அண்ணன் மற்றும் சித்தியோடு பனம்பழம் சுட்டு சாப்பிட்டதும், ரொம்ப நேரமாக எங்களைக் காணாமல் தேடிக் கொண்டு இருந்த தாத்தாவிடம் திட்டு வாங்கியதும்..... இன்னும் அந்த சுட்ட பனம்பழத்தின் வாசனை என் மனதோடு இருக்கிறது. அங்கே ஆற்றின் அக்கரையில் வரிசையாக நிற்கும் தேக்கு மரங்கள். பேருந்தில் செல்லும் போது அந்த வரிசையைப் பார்த்ததும் பாட்டி மடியிலிருந்து எழுந்து குதிக்க ஆரம்பித்து விட்டுவேன், "ஊர் வந்தாச்சு.... ஊர் வந்தாச்சு...".

என் ஆரம்பப் பள்ளியில் இரண்டு வேப்பமரங்கள். உதிர்ந்த இலைக்கொத்துக்களில் இலைகளை நீக்கி விட்டு காம்புகளைச் சேர்த்து துடைப்பமாகக் கட்டி மரத்தடியைப் பெருக்கிச் சுத்தம் செய்வது எங்கள் பெரும்பாலோரின் விருப்பமான வேலையாக இருந்தது. என் வீட்டுத் தோட்டத்தில் இரண்டு பெரிய தென்னைகளோடு ஒரு நெல்லி மரமும், கொய்யா மரமும் இருந்தது. அனில்கள் குதித்து குதித்து நெல்லிப்பூக்களை எல்லாம் உதிர்த்து விடுவதும், பெரியதாகிப் பழுக்கட்டும் என்று விட்டு வைத்திருக்கும் கொய்யாப் பழங்களைக் குடைந்து சாப்பிட்டு விடுவதும் வழக்கம்.

அப்புறம், மறக்க முடியாதது அண்ணாவின் பள்ளியில் இருந்த அமானுஷ்ய மணமும், அழகும் வாய்ந்த பூக்கள் பூக்கும் நாகலிங்க மரம். அந்தப் பூவைத் தொடுவதற்கு நான் பயந்ததும், அதன் வடிவமைப்பைப் பார்த்து இது பூ தானா என்று வியந்ததும் இன்றும் நான் என்றாவது நாகலிங்கப் பூக்களைப் பார்க்க நேர்ந்தால் நினைவு வருகிறது.

நான் சிறு வயதில் பார்த்ததால் இந்த மரங்கள் ரொம்பப் பெரியதாய்த் தெரிந்ததை நான் வளர வளர உணர்ந்த போதிலும், மரங்களின் பிரம்மாண்டத்தை நான் உணர்ந்து பிரமித்துப் போனது, பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயத்தில் பார்த்த 400 வருடங்களுக்கும் அதிகமான வயதுடைய 'கன்னிமரா' தேக்கு மரம் தான்.


ஏழெட்டு பேர் சேர்ந்து கைகோர்த்தால் தான் அந்த மரத்தின் சுற்றளவை அளக்க முடியும்.
 
எத்தனை வயல்கள் இருந்தாலும் நெல் வயல்கள் தனி அழகுடன் என் மனதைக் கவர்ந்து விடுவது போல் எத்தனை மரங்கள் இருந்தாலும் வேப்ப மரங்கள் மட்டும் பார்த்த மாத்திரத்தில் எனக்கு என் சொந்தஊரில் இருப்பது போன்ற உணர்வைக் கொடுப்பவை.

தன்னோடு கூட வளர்ந்த தன் தோட்டத்து மரத்தை தன் சகோதரியாகப் பாவித்ததால் அதன் முன் தன் காதலனோடு தனித்திருக்க வெட்கப் பட்ட அந்த முகம் தெரியாத சங்க காலத் தலைவியை நினைவு கூர்கிறது மனம். அப்படிப் பட்ட மனமுடைய சமூகமே தொடர்ந்து இருந்தால் இப்போது போர்க்குரல் எழுப்பத் தேவையிருந்திருக்காது, "மனிதனே, மரங்களைக் காப்பாற்று".

வியாழன், 21 ஜூலை, 2011

காக்கைகளிடமிருந்து கற்றுக் கொள்ள...

ஒரு சிற்றூரிலிருந்த குழந்தைப் பருவத்திலிருந்து பெருநகரத்தில் வசிக்கும் இந்த நாள் வரை எந்த ஒரு நாளிலும், ஒரு நாளின் எந்த ஒரு நேரத்திலும் என் ஜன்னலுக்கு வெளியே என்னால் பார்க்க முடிகிற ஒரு பறவை என்றால் அது காக்கை தான். பொதுவாக காக்கையைப் பலர் பறவை என்ற பட்டியலில் சேர்ப்பது இல்லை. பறவை என்றால் அழகாக இருக்க வேண்டும், என்றும் காக்கைகளுக்கும் அழகுக்கும் வெகு தூரம் என்றும் பலர் நினைக்கிறார்கள். காக்கையைப் பற்றிப் பாடியவர்களும் அதன் அழகைப் பற்றிப் பாடியதாய் நினைவில்லை.

சிறு வயதிலிருந்தே காக்கைகளைப் பார்த்து வியப்பதற்கு எனக்குப் பல விஷயங்கள் இருக்கின்றன. அதன் மெல்லிய உடல்வாகு (ஆங்கிலத்தில் 'slim and sleek'  என்று  கூறலாம்), லேசான சாம்பல் நிறத்தில் மிக மென்மையான கழுத்து, smooth landing என்று கூறுவது போன்ற அது தரை வந்தமரும் விதம், மனிதர்களையும் அவர்களின் நடவடிக்கைகளையும் புரிந்த அதன் புத்திசாலித்தனம் இப்படி எவ்வளவோ.

என் பள்ளிப் பருவத்தில், என் வீட்டுக் கொல்லையில், காய்ந்து உதிர்ந்த இலைகளைக் கூட்டி ஒதுக்கிய குப்பைகளில், காக்கைகள் கூடு கட்டுவதற்காக மெல்லிய குச்சிகளைத் தேடுவதைப் பார்த்திருக்கிறேன். ஒரு கைதேர்ந்த கொத்தனார் நல்ல செங்கல்லைத் தேர்ந்தெடுக்கும் கவனத்தோடு தன் அலகால் குச்சிகளை எடுத்து ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை அலகாலேயே தடவிப் பார்த்து சீராகவும் வலுவாகவும் இருக்கும் குச்சிகளை மட்டும் தேர்வு செய்யும் காக்கைகளின் அறிவையும், தொழில்திறனையும் பார்த்து அதிசயித்து இருக்கிறேன்.

பறவை தன் குஞ்சுக்குத் தன் அலகினால் தான் உணவு ஊட்டும்  என்பதையும் முதலில் காக்கைகளைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். இன்று வரை தமிழ்நாட்டில் குழந்தைக்கு சோறூட்டும் அம்மாக்களின் முதல் நண்பன் காக்கை தான். "காக்கா பார்... காக்கா..." என்று அம்மா சொல்லி காக்கையைக் காட்டி அதற்கும் கொஞ்சம் சோறு போடும்போது அந்தக் குழந்தை கற்றுக் கொள்வது தினமும் காக்கைக்குச் சோறிட வேண்டும் என்ற அந்த சடங்கை அல்ல... வாழ்க்கையை... வாழ்க்கையின் மிக முக்கியமான சாரங்களை.

ஆனால், ஒன்று மட்டும் சற்றே மனதை நெருடுகிறது.
நமக்குச் சிறு வயதில் சொல்லப்பட்டது போல் தனக்குக் கிடைத்த உணவைத் தன் இனத்தோடு பகிர்ந்து கொள்வதை விடுத்துப் பிற காக்கைகளை விரட்டி விட்டு சில காக்கைகள் தான் மட்டும் உண்ணுவதைப் பார்த்திருக்கிறீர்களா?.....
எனக்கென்னவோ மனிதன் காக்கைகளைப் பார்த்துக் கற்றுக் கொண்ட காலம் போய் காக்கை மனிதனைப் பார்த்து கற்றுக் கொள்கிற காலம் துவங்கி விட்டது என்று தான்  தோன்றுகிறது.

புதன், 20 ஜூலை, 2011

என் ஊரில் ஏன் கடல் இல்லை?

நான் சிறு வயது முதல் என் அப்பாவிடம் கேட்கும் கேள்வி இது. "நம்ம ஊரில் ஏம்ப்பா கடல் இல்லை?..."  அப்பா சொன்ன பதில் எனக்கு சமாதானம் சொல்லவில்லை. கல்லூரிப் படிப்பு எல்லாம் முடித்த பின்னும் இப்போதும் கூட என் மனது அவ்வப்போது கேட்கிறது, "என் ஊரில் ஏன் கடல் இல்லை?"

கடல் என்றால் என்ன என்று என் அப்பாவைக் கேட்டிருக்கிறேனா என்று தெரியவில்லை. அப்படிக் கேட்டிருந்தால் எப்படி பதில் சொல்லியிருப்பார்கள் என்று யோசித்துப் பார்க்கிறேன். கடலை வர்ணிக்கத்தான் முடியும், வரையறை எப்படி சொல்வது. நான் ஏன் அப்பாவிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டேன்?

நான் முதன் முதலில் கடல் பார்த்தது இன்னும் என் நினைவில் இருக்கிறது. என் பள்ளி விடுமுறைக்கு சித்தி வீட்டுக்குச் சென்ற போது வெயில் தாழாத ஒரு மாலைப் பொழுதில் அக்கா, அண்ணன், சித்தி பிள்ளைகளோடு பேருந்தில் சென்று இறங்கி நடந்து சென்றோம்... போக போக மண் தரை முடிந்து, மணல் தெரிய ஆரம்பித்தது. பொறுமையிழந்த நான் எப்போது தான் கடல் வரும் என்று கேட்டேன். அண்ணன், "இதோ... வந்து விட்டது.. உனக்கு அந்த சத்தம் கேட்கிறதா?" என்று கேட்ட போது தான் கவனித்தேன், உறுமல் போன்ற ஒரு ஒலியை.. தூ...ரத்தில். நடக்க நடக்க ஒலி பேரோசையாய் ஆகிக் கொண்டே வந்தது. ஆர்வத்தாலும் அந்த பேரோசை கொடுத்த பயத்தாலும் இதயத் துடிப்பு அதிகரித்தது தெரிந்தது. சற்று தூரத்தில் தரை ஒரு மேட்டில் போய் முடிந்தது. அந்த மேட்டில் ஏறியதும் பார்வையிலும் காதுகளிலும் வந்து அறைந்தது கடலின் பிரம்மாண்டம். அசைவற்று நின்ற எனக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. 'உலகம் இவ்வளவு பெரியதா?'

கடலை நான் சந்தித்த அந்த முதல் அனுபவம் ஆச்சரியங்கள் நிரம்பியது. எவ்வளவு தண்ணீர்!.. தண்ணீரால் இவ்வளவு பெரிய சத்தம் போட முடியுமா!.. எவ்வளவு தூரத்துக்கு மணல் தரை.. அலைகள் வருடக் கணக்காக ஓயாமல் அடிக்குதாமே, அது எப்படி!.. இவ்வளவு பெரிய அலைகளில் அந்த சிறிய படகுகள் எப்படி கவிழாமல் போகின்றன!. இன்னும் எத்தனையோ ஆச்சரியங்கள். அந்த உப்புக் காற்றின் பிசுபிசுப்பு, கால் நனைத்துச் சென்ற அலைகள், தண்ணீர் பின் வாங்கியதும் மறைந்து போகும் நுரை, அழகழகான கிளிஞ்சல்கள், ஆங்காங்கே ஓடி ஒளியும் நண்டுகள்.... எல்லாமே புதியதாய், மனதைக் கவர்ந்துவிடுவதாய்... கடல் பேரழகு வாய்ந்த ஒரு தனி உலகம்.

அப்பேர்ப்பட்ட கடல் என் ஊரிலும் இருந்தால் நான் தினம் தினம் சென்று விளையாடலாமே! என்னை போல் எவ்வளவு பேர் நினைத்திருப்பார்கள்? எல்லாருக்காகவும் தான் கேட்கிறேன்... ஒவ்வொரு ஊரிலும் கடல் ஏன் இல்லை?

ஞாயிறு, 17 ஜூலை, 2011

குழந்தைப் பருவ வாசனை

நன்றாக விடிந்துவிட்ட போதிலும் வானம் முழுவதும் மேகம் மூடியிருப்பதால் சூரிய ஒளியையே காணவில்லை. வழக்கம் போல என் பால்கனியில் நான். சில நேரங்களில் மட்டுமே காற்று வரும் என் பால்கனியை நான் மிகவும் விரும்புவதற்கு ஒரு காரணம், அது என் குழந்தைப் பருவத்தின் இனிமையான பொழுதுகளைப் பற்றிய நினைவுகளைப் பெரும்பாலும் ஞாபகப்படுத்துவதுதான்.

சென்ற சில நாட்களில் கிடைத்த மழைத்தூறல்களால் எல்லா மரங்களிலும் பசுமையான புதிய இலைகள் காற்றில் லேசாக அசைந்து கொண்டிருந்தன. சற்று தூரத்தில் ஒரு வேப்ப மரத்தின் பின்னாலிருந்து கிளம்பிய புகை என் கவனத்தை ஈர்த்தது. ஏதாவது குப்பைகளை எரித்து விட்டிருப்பார்கள். ஆனால், ஏனோ எனக்கு சிறு வயதில் கிராமத்தில் என் பாட்டி நெல் அவிக்கும் வாசனை நினைவுக்கு வந்தது. அது ஒன்றும் அவ்வளவு இனிமையான வாசனை இல்லை என்றாலும், குழந்தைப் பருவ அனுபவங்கள் என்றும் இனிமையானவை இல்லையா? உண்மையில் அந்த சிறு வயதில் அது எனக்கு மிகவும் பிடித்த வாசனைகளில் முக்கியமான ஒன்றாகவே இருந்திருக்கிறது. அதற்குக் காரணம் என் பாட்டியின் அருகாமையும் அவர் சொன்ன கதைகளும். இரவு முழுவதும் நெல் அவித்துக் கொண்டு இருக்கும் பாட்டிக்கு அருகில் அமர்ந்து விடியத் துவங்கும் பொழுதுகளில், லேசான குளிரில் அடுப்பு எரிப்பதற்கு வைக்கோல் குவியலில் இருந்து சிறிது சிறிதாக வைக்கோலை அடுப்புக்குள் நகர்த்தி விட்டுக் கொண்டே கேட்ட கதைகள் அதிகம் நினைவில்லாத போதும் அந்த அனுபவமும், நெல் அவிக்கும் வாசனையும் என் மனதில் அப்படியே பதிந்து இருப்பதை என்னால் உணர முடிகிறது.

சில சமயம், சில வாசனைகள் ஏதேதோ பழைய நினைவுகளை  ஞாபகப்படுத்துவது இன்று வரை எனக்கு ஒரு இனிமையான ஆச்சரியமாகவே இருந்து வருகிறது. வீதிகளில் நடந்து செல்லும் போது, ஏதோ ஒரு வீட்டிலிருந்து வரும் பூண்டு குழம்பு வாசனையில், 'அட, இங்கே யாரோ நம்ம ஊர்க்காரங்க இருக்கிறாங்க போல இருக்குதே...'  என்று மனசு சொல்லும். வேலையில் ஆழ்ந்து இருக்கும் போது திடீரென்று வரும் மண் வாசனை,  வெகு தூரம் செல்லும் பேருந்தின் ஜன்னலோரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் பொழுதுகளில் சில கிராமப்புறங்களைக் கடக்கும் போது வரும் பசுமையான நெல் வயலின் வாசனை,  மாவு மில்லில் தீபாவளிப் பலகாரங்களுக்கு மாவு அரைக்கும்  வாசனை, கடுகு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கும் வாசனை, சிறு வயதில் ரொம்பப் பிடித்த என் சித்தி போட்டுக் குளிக்கும் மைசூர் சாண்டல் சோப்பின் வாசனை.....  இப்படி இன்னும் எத்தனையோ....  குழந்தைப் பருவ ஞாபகங்களைத் தூண்டும் பல வித வாசனைகள்..... அவற்றை இப்போதும் எப்போதாவது, எங்கேயாவது நுகர நேர்வது, இந்த இயந்திர வாழ்க்கையில் வேகமாக ஓடிக் கொண்டு இருக்கும் காலத்தை ஒரு சில கணங்கள் நிறுத்தி விடுகிறது. சலித்து, மரத்துப் போன மனசுக்கு கொஞ்சம் நினைவு வருகிறது புன்னகை.

சனி, 16 ஜூலை, 2011

பாதையில் பதிந்த சுவடுகள்

நான் எழுதி நிறைய வருடங்கள் ஆகி விட்டன. வலைப்பூ என்னும் அறிவியல் அதிசயத்துக்கு நன்றி. நான் மீண்டும் எழுத ஆரம்பித்து விட்டேன். என் போல எண்ணுவோர் இன்னும் இருக்கிறார்கள் என்று வலுவாக நம்புகிறேன்.

நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு திரைப்பட இயக்குநர் சொன்ன ஒரு வாக்கியம் என்னை இன்றே எழுதத் தூண்டியது. "ஒரு மாட்டு வண்டி கூட பாதையில் சுவடு பதித்துச் செல்கிறது. மனிதனாகிய நான் சுவடு பதித்துச் செல்ல வேண்டாமா?..." என்றார் அவர். தற்போது என்னால் செய்ய முடிந்த ஒரு செயலை இதற்கு மேலும் தள்ளிப்போடாமல் இன்றே செய்ய முடிவெடுத்து முயற்சி செய்கிறேன்.

விடிந்தும் விடியாத காலைப் பொழுதில், அந்த வாக்கியத்தையே மனதில் அசை போட்டவாறு  என் வீட்டு பால்கனியில் நின்று பார்த்த போது தெருவில் எதிர்சாரியில் படுத்திருந்த மாட்டைப் பார்த்தேன். சுவடு, மாட்டு வண்டி, பாதை என்கிற வார்த்தைகளை என் வாய் உச்சரித்தே பல காலம் ஆகிவிட்டதையும், இயல்பான, என் மனதுக்கு இசைந்த வாழும் சூழலை விட்டு விலகி நான் வாழ நேர்ந்த நிலைமையையும் மற்றுமொரு முறை நினைவு கூற நேர்ந்தது. இதே போன்ற மனநிலையில் எவ்வளவோ பேர் இருப்பார்கள் என்ற நினைவும் வந்தது. அவர்களுக்காகவும், எனக்காகவும் இதோ இந்த வலைப்பூ.


இனி முடியும் போதெல்லாம் எழுதுவேன்.....