வியாழன், 29 செப்டம்பர், 2011

அதிகாலையும், அடைமழையும்


வருடக் கணக்காக ஆகிறது இப்படி அதிகாலையில் வரும் அடைமழையை நான் ரசித்து. மனதுக்கு வயது ஆக ஆக இப்படிப்பட்ட அற்புதமான விஷயங்களை ரசிக்க மறந்து விடுகிறதோ?
இன்றைய காலைப் பொழுது என்னை ஆச்சரியப் படுத்தியது. 6.15 மணிக்கு எழுந்து பார்த்த போது எப்போதும் போல சுள்ளென்று அடிக்கப் போகும் சூரியனுக்காகத் தயாரான மாதிரி பளீரென்று இருந்தது போல் நினைவு. ஆனால் 7.30 மணிக்கு இப்படி இடியுடன் கூடிய மழை. ஒரு மணி நேரத்துக்குள் எவ்வளவு பெய்ய முடியுமோ அவ்வளவும் பெய்து விட வேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்தது போலும் வானம்.

எதிர்பாராத மழை கொண்டு வரும் ஆச்சரியங்கள்தான் எப்படிப்பட்டவை!... பள்ளிக் காலங்களில் இப்படிப்பட்ட திடீர் அதிகாலை மழை 'இன்று பள்ளிக்கு விடுமுறையாய் இருக்கலாம்..' என்ற குதூகலத்தைக் கொடுத்திருக்கிறது. கல்லூரி நாட்களில் மழையில் நனைந்தவாறே மிதிவண்டியில் ஐந்து கிலோமீட்டர் பயணித்து மழை நின்றதும் நண்பர்களுடன் மீண்டும் வீடு திரும்பிய சந்தோஷ தருணங்களைக் கொடுத்திருக்கிறது. விடுமுறைக் காலங்களில் கண் விழிக்கும் போது பெய்து கொண்டிருக்கும் மழை இன்னும் சோம்பலை அதிகமாக்கும். போர்வையோடு வாசலுக்கு வந்து என் பூனைக்குட்டியும் நானும் உரசியவாறு உட்கார்ந்து மழையை ரசிப்பதுண்டு.

பாட்டி வீட்டில் இருக்கும் நாட்களென்றால் இன்னும் சுகம். பல் தேய்த்து முகம் கழுவும் வேலையை மட்டும் சம்பிரதாயமாய்க் கருதி செய்து முடித்து விட்டால் சூடாகப் பால் குடித்து சிறிது நேரத்தில் பொரியரிசி, வறுத்த பயறு, சில சமயங்களில் முறுக்கு, இன்னும் அந்த சமயத்தில் தயாரிக்க முடிந்த நொறுக்குத் தீனி (நடுவில் சூடான இட்லி வேறு - காலை உணவாம்!..)... இப்படி ஒன்று முடிந்தால் அடுத்தது என்று வந்து கொண்டே இருக்கும்.

மழையை ரசிக்க குழந்தை மனமுடைய நண்பர்களும் அருகில் இருந்தால் இப்போது வசதியாக இருக்கும் என்று தோன்றுகிறது. அக்காவும், அண்ணனும் இருந்தால் சிறு வயது கதைகள் பேசலாம். என்னை விட வயது சற்றே குறைவானாலும் என் கூட விளையாடிய பின் வீட்டு ஜேன், ஷெரின் இருந்தால் பேப்பர் கப்பல் விட்டு கை கொட்டி சிரித்து நேரம் போவது தெரியாமல் இருக்கலாம். பள்ளிக் கூடத்தில்  என் வகுப்பறையில் இருந்தால் நனைந்த சீருடையால் நடுங்கும் உடலுடன் எப்போது விடுப்பு அளித்து வீட்டுக்கு அனுப்புவார்கள் என்று நண்பர்களுடன் காத்திருக்கலாம்.

கல்லூரியிலிருந்து சிறு தூரலில் நனைந்தவாறே வீடு திரும்பும் பொழுது என்றால் நண்பர்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல சொல்ல தைரியமும் ஆசையும் உள்ள யாராவது ஒருவரையும் கூட சேர்த்துக் கொண்டு சாக்லெட் ஐஸ் அல்லது மாங்கோ ஐஸ் வாங்கிக் குச்சியை ஒரு கையில் பிடித்து சுவைத்தவாறு இன்னொரு கையில் சைக்கிள் ஓட்டலாம்.
குறைந்த பட்சம் அப்பாவிடம் திட்டு வாங்கிய படி (நாளைக்கு எக்ஸாம் இருக்கு.. படிக்கறதை விட்டுட்டு வேடிக்கை பாரு... நல்லா மார்க் வாங்கிடலாம்....)  ஜன்னல் வழியே மழையை வேடிக்கை பார்த்து அம்மா பார்க்காத நேரம் மழைத் தண்ணீரில் கை நனைத்து விளையாடவாவது செய்யலாம் .....


பார்ப்போம்... வயதான காலத்தில் ரிட்டயர் ஆன பிறகாவது மீண்டும் மழையை ரசிக்க மனதும் நேரமும் சேர்ந்து அமைகிறதா என்று!....

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

புலிக் கூண்டும், கொசு வலையும்


மனிதன் பார்த்து நடுங்கும் விலங்கு எது என்று கேட்டால் ஒவ்வொரு பதில் வரக்கூடும் - சிங்கம், புலி, பாம்பு, யானை, கரடி.. இப்படிப் பல. ஆதி காலத்தில் இவற்றைப் பார்த்து பயந்த மனிதன் தான் பின்னர் வேட்டையாடி இவற்றைக் கொன்று தன் வீரத்தை நிலை நாட்டினான்.

மனித இனத்தை அறிவியல் விலங்கின வகைகளில் ஒன்றாக வகைப்படுத்தினாலும், அதே அறிவியல் அவனது ஆறாவது அறிவைக் காரணம் காட்டி அவனை அதி ஆற்றல் வாய்ந்த, உலகத்தை, ஏன் இயற்கையைக் கூடக் கட்டி ஆளும் ஆளுமை படைத்த ஒரு 'மீ உயர்' உயிரினமாகக் காட்டுகிறது.

ஆதி காலத்தில் உணவுக்காகவும், உடைக்காகவும் விலங்குகளை வேட்டையாடிய மனிதன், நாகரிகம் அடைந்த பின் வேடிக்கைக்காகவும், தன் வீரத்தைப் பறைசாற்றிக் கொள்ளவும், கௌரவத்துக்காகவும், வேட்டையாடினான். விலங்குகளைக் கொன்றதோடு நிற்காமல், உயிருடன் பிடித்து அடைத்து வைத்து காட்சிப் பொருளாக்கினான்.

மனிதன் காட்சிப் பொருளாக்கிய முக்கியமான விலங்குகள் புலி, சிங்கம், யானை போன்றவை. இவற்றுள் புலி நமது தேசிய விலங்கு ஆதலால் இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. காட்டுக்குள் இருக்கும் போது ஒரு புலியின் குரலைக் கேட்கவே அஞ்சும் மனிதன், அதைப் பிடித்து, அதற்கென ஒரு கூண்டும் செய்து அதற்குள் அடைத்ததும், அதைச் சீண்டிப் பார்ப்பதும், அதன் கூண்டுக்குள் 'பாப்கார்ன்' தூக்கி எறிந்து விளையாடுவதுமாய் புலியை ஒரு பூனைக்குட்டியைப் போல நடத்துகிறான்.


இவ்வளவு வலிமை மிக்க புலியைக் கூண்டில் அடைக்கும் ஆற்றல் இருந்த போதிலும் ஒரு அடியில் நசுங்கிச் சாகும் கொசுக்களுக்குப் பயந்து மனிதன்தானே கொசுவலைக்குள் ஒளிகிறான்?  :-)   :-)

சனி, 6 ஆகஸ்ட், 2011

பிறந்த குழந்தை செய்த கண் தானம்

சில நாட்களுக்கு முன் தொலைக்காட்சியில் பார்த்த மனதைத் தொட்ட இன்னொரு நிகழ்வு இது. பிறந்து இரண்டே நாட்கள் ஆன ஒரு பெண் குழந்தை தான் இந்த உலகை விட்டுப் பிரிந்தாலும், தன் கண்களைத் தானம் கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறது.

சென்னையைச் சேர்ந்த ஆரோக்கிய தாஸ், ஒரு சிறு உணவகத்தில்  சமையல்காரராக வேலை செய்து சம்பாதிப்பவர். தன் ஏழ்மையின் காரணமாக தனியார் மருத்துவமனையில் சேர்க்க முடியாமல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணியான தன் மனைவியைப் பிரசவத்துக்காக சேர்த்திருக்கிறார். பெண் பிறப்பாள் என்ற ஆசையில் காத்திருந்தவருக்குப் பெண் குழந்தையும் பிறந்திருக்கின்றது. அவரின் மகிழ்ச்சி அதிக நேரம் நிலைக்கவில்லை.

குழந்தையின் எடை மிகக் குறைவாக இருப்பதாகவும், இதயத்துடிப்பு சீராக இல்லை என்றும், அதனால் குழந்தையைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்திருப்பதாகவும் மருத்துவர்கள் அவரிடம் சொன்னதைக் கேட்டுக் கலங்கிப் போன அவர் கடவுளின் மேல் பாரத்தைப் போட்டு விட்ட நம்பிக்கையுடன் எப்படியாவது தன் மகள் உயிரோடு தன்னிடம் வந்துவிடுவாள் என்று நம்பிக்கையோடு இருந்திருக்கிறார். ஆனால் பிறந்த இரண்டாம் நாள் அவரின் மகள் இறந்து விட்டாள். அப்பேர்ப்பட்ட துயரத்திலும் சிவகுமார் என்ற சமூக ஆர்வலரின் அறிவுரையினை ஏற்று அச்சிறு குழந்தையின் கண்களைத் தானம் செய்திருக்கிறார், ஆரோக்கிய தாஸ்.

"என் மகள் எங்களை விட்டுப் போய்விட்டாலும், அவளது கண்கள் இந்த உலகத்தைப் பார்க்க முடிந்தது, அது எனக்கு மகிழ்ச்சி தான்." என்கிறார் ஆரோக்கிய தாஸ்.கொடுத்தாலும் குறையாத செல்வத்தை உடையவர்கள் கூட கொடுப்பதற்குத் தயங்குகிறார்கள். ஆனால், இந்த ஏழையின் மனது எவ்வளவு பெரியது?

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.
(குறள் எண்: 223)
இதன் பொருள்:  தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக் கொள்ளாமல் பிறருக்கு ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும்.

இக்குறளின் பொருள் உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும், உயர்குடிப் பிறந்தவர் என்றால் யாரென்பது. பணமோ, சாதியோ ஒருவனை உயர்ந்தவன் என்று இச்சமூகத்துக்கு அறிமுகப் படுத்தலாம். ஆனால், சக மனிதனின் கஷ்டம் உணர்ந்தவனே உயர்ந்தவனாக அறியப் படுவான்.

அன்னை தெரெசாவோ, ஹெலென் கெல்லரோ பிறக்கும் போதே உலகம் போற்றுபவர்களாகப் பிறந்து விடவில்லை. அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைதான்  உலகுக்கு அவர்களை உயர்ந்தவர்களாக அறிவித்தது.
கண் தானம் செய்யுங்கள், கண் தானம் செய்யுங்கள் என்று உலகம் முழுதும் பரப்புரை செய்யும் உயர்சாதி அமைப்புகள் இந்தக் குழ்ந்தைக்கும் அதைப் பெற்றவருக்கும் சிலை எடுத்து, அவர்கள் புகழ் பாடி மரியாதை செய்யட்டும்.
இறந்து விட்ட போதிலும் இறவாச் செயல் புரிந்த அந்தக் குழந்தைக்கு நாம் செய்யும் மரியாதை, நம் கண்களைத் தானம் செய்வது தான்.

மனம் படைத்தவர்களே! கண் தானம் செய்யுங்கள்.


 
மேலும் விவரங்களுக்கு
S.V.G.Subramanian
Deputy Manager - Eye Bank, Sankara Nethralaya,
18, College Road, Chennai - 600 006,
PH: 044 28281919 , 044 42271830, 044 28226694.
e-mail: svgs@snmail.org




.



 

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

43 வயது குழந்தை

நேற்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பார்த்த ஒரு உண்மை வாழ்க்கை பற்றிய செய்தி மனதைக் கனமாக உணரச் செய்தது. அது சென்னையில் வாழும் பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த ரஞ்சிதம் என்ற ஒப்பற்ற ஒரு தாயைப் பற்றியது.

அந்த நிகழ்ச்சியில் அவரின் குழந்தையை மையமாக வைத்துப் பேசியிருந்தாலும், எனக்கு மனதில் பதிந்தது, அந்தத் தாயின் வலிதான். துன்பத்தைப் பகிர்ந்து கொள்ள கணவனும் இல்லை, பெற்ற பிள்ளைகளும் இல்லாத நிலையில் தன் 65 வயதிலும் வீட்டு வேலை செய்து தன் 43 வயது பெண் குழந்தையைக் காப்பாற்றும் அவரது துணிவும், எப்படியும் தன் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவரது முனைப்பும் பகட்டான இந்த கார்ப்பரேட் உலகத்துக்குப் புரியுமா?

43 வயது என்றும் குழந்தை என்றும் முரண்பாடாகச் சொல்லப் படக் காரணம், ரஞ்சிதம் அவர்களின் பெண்ணுக்கு 43 வயது ஆனாலும் 2 வயது குழந்தைக்குரிய உடல், மன வளர்ச்சிதான் இருக்கிறது. குளிப்பாட்டுவது, உணவு ஊட்டுவது என்று எல்லாவற்றையும் அம்மாதான் செய்து விட வேண்டியிருக்கிறது இந்த 43 வயது  பெண்ணுக்கு.

வீட்டு வேலை செய்து பிழைக்கும் ரஞ்சிதம் அவர்கள், வேலை செய்யும் இடம் முதல் எங்கு சென்றாலும் தன் பெண்ணைத் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. இந்தக் கஷ்டங்களை எல்லாம் விடத் தன் பெண் எல்லாரையும் போல ஒரு வாழ்க்கை வாழ முடியாமல் இருப்பதும், அவளைப் பார்ப்போர் பைத்தியம் என்று ஏளனம் செய்வதும் தான் அவருக்குச் சொல்ல முடியாத துயரமாக இருக்கிறது என்பதை உணர முடிகிறது.

"நான் செத்துப் போயிட்டா நீ யார் கிட்ட இருப்ப?" என்று சிரித்துக்கொண்டே தன் குழந்தையிடம் அடிக்கடி கேட்கிறார் ரஞ்சிதம். அந்த சிரிப்பின் உள்ளே இருக்கும் வலியின் ஆழம் நமக்குப் புரிகிறது. "நான் இறந்து போனால் என் மகளும் இறந்து விட வேண்டும், அது தான் நல்லது..." என்கிறார் ரஞ்சிதம். கஷ்டப் படும் ஏழைகளுக்காக இதோ நான் இருக்கிறேன் என்று பல யுகங்களாக அறிக்கை விட்ட படியிருக்கும் ஏதாவது ஒரு சாமி ரஞ்சிதம் இருக்கும் போது இல்லாவிட்டாலும் அவரது மறைவுக்குப் பின் அவரது மகளைக் காப்பாற்றட்டும்.

இரண்டு வருடங்கள் வரை நம் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெளியில் செல்வதே நம்மில் பலருக்குக் கஷ்டமாக இருப்பதால் வீட்டில் பார்த்துக் கொள்ள ஒருவரைத் தேடுகிறோம். ஆனால் ஒரு தாய் 43 வருடமாகத் தன் பெண்ணைச் சுமப்பது முடிகிற காரியமா? இப்படிப்பட்ட ஒரு தாய்க்கு என்ன விருது வழங்க முடியும் இந்த அரசாங்கத்தால்? என்ன அங்கீகாரம் கொடுக்க முடியும் இந்த சமூகத்தால்? பத்மபூஷண் தொடங்கி பாரத ரத்னா வரை கொடுக்கப் படும் விருதுகளுக்கு சாமான்ய மக்கள் அருகதையற்றவர்கள் என்றால் மக்களாட்சி என்பதற்கு என்ன தான் பொருள்?

இந்தத் தாயின் தேவை தன்னையும், தன் குழந்தையையும் காப்பாற்றும் அளவு சம்பாதிக்க  ஒரு நல்ல வேலை. அவர் யாரிடமும் பொருளுதவி யாசிக்க விரும்பவில்லை.  நாட்டை ஆளும் நாயகர்களோ, மக்களின் கவனத்தை ஆளும் நடிகர்களோ, பணத்தை ஆளும் பன்னாட்டு வணிகர்களோ - சக மனிதர்களில் யாராவது ஒருவராவது குறைந்த பட்சம் அவருக்கு ஒரு வேலையாவது ஏற்பாடு செய்து தர முன் வருவார்களா?

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

மழையை ரசிக்க ஒரு மனது

நேற்று மதியம் பெய்த மழை சிறிதே ஆனாலும், மனதுக்கு ரொம்ப நன்றாக இருந்தது. கடந்த சில வருடங்களில் எத்தனையோ ஞாயிற்றுக் கிழமைகளில் மழை பெய்திருந்தாலும், நேற்று என்னவோ அதை ரசிக்க சில நிமிடங்கள் கிடைத்தது அதிசயமாய் இருந்தது. அப்படியென்றால், மனது மழையை ரசிக்கும் அளவு சற்று இறுக்கம் குறைந்து இருந்திருக்கிறது. பள்ளி நாட்களில் இப்படி ஞாயிற்றுக்கிழமை மதியம் பெய்யும் மழை எவ்வளவு சுகமானதாக இருந்தது?...

அம்மா சமைத்த கோழிக்கறிக் குழம்பும், பிரட்டலும் சாப்பிட்டு முடித்த கையோடு மழை பெய்தால் இன்னும் சுகம். மாடிப்படிக் கட்டில் வசதியாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, சிறு குச்சியால் பல் குத்தியவாறு மழைச் சாரலை அனுபவித்துக் கொண்டே வீதியை வேடிக்கை பார்ப்பது மனதுக்கு ரொம்பப் பிடித்த விஷயங்களில் ஒன்று.

பேப்பர் கப்பல் விடுவதும்,வீதியில் ஓடும் கணுக்காலளவு மழை நீரில், ஆங்காங்கே வேட்டைக்கார வேம்புவின் தொப்பி போல் தொப்பியணிந்த போலீஸ்காரர்கள் விரைந்து செல்வது போல காற்றுக் குமிழ்கள் ஓடி உடைந்து மறைவதைப் பார்த்துச் சிரிப்பதுமாய்ப் போகும் நேரம்.

நல்ல மழைக் காலங்களில் இப்படி மழை வரும் போது நினைத்துக் கொள்வேன், "இதே போல நாளைக் காலைப் பள்ளிக்குக் கிளம்பும் நேரம் மழை வந்தால் நல்லது. ஒரு நாள் லீவு கிடைக்கும்...." ஆனால், மறுநாள் காலை தெளிவாக வெய்யில் அடிக்கும்.

பள்ளியிலிருந்து திரும்பும் போது லேசாகத் தூறும் மழையில் மனதுக்குப் பிடித்த பாடலை முணுமுணுத்தவாறு சைக்கிளை மிதித்தால் ஏதோ அப்படி ஒரு சந்தோஷம் மனதைக் கவ்வும். மழையில் நனைந்து குளிர்ந்த உடலைத் துவட்டி விட்டு காய்ந்த மாற்றுடை அணியும் போது லேசாகப் பரவும் வெதுவெதுப்பு.

அது எப்படியோ, பள்ளிக் காலங்களில் மழை பெய்திருந்தாலும், வெய்யில் அடித்திருந்தாலும் இப்போது நினைத்துப் பார்க்கும் போது எல்லாமே இனிமையான நினைவுகளாகத் தான் இருக்கின்றன. கடந்த கால நினைவுகள் போல் நிகழ்கால நினைவுகள் ஏன் இனிப்பதில்லை?


வெள்ளி, 29 ஜூலை, 2011

பகற் கொள்ளை

சில காலத்துக்கு முன் தண்ணீர் தட்டுப்பாட்டுக்குப் பெயர் போன சென்னையில் வாழும் மக்களே இப்போது தண்ணீர் தாராளமாக வருவதால் குழாயைத் திறந்து விட்டு விட்டு வேறு வேலையைப் பார்க்கிறார்கள், நிரம்பி வழியும் தண்ணீர் வீணாவதைப் பற்றிய கவலையின்றி.

முன்னாளில் எல்லாம் பேசும் போது 'பணத்தைத் தண்ணீர் மாதிரி செலவு செய்யறான்', 'அவனுக்கு இதெல்லாம் தண்ணீர் பட்ட பாடு' என்று சொல்லுவார்கள். அடுக்குமாடிக் குடியிருப்புகளும், உலக மயமாக்கப்பட்ட, சந்தைப் படுத்தப்பட்ட வாழ்க்கைமுறையும் வந்த பின்பு தண்ணீர் சிக்கனம் என்ற வார்த்தை தேவையற்றதாகவும், பணம் படைத்தவர்களின் வாழ்க்கைத் தரத்துக்கு ஒவ்வாததாகவும் கருதப் படுவது வேதனையையும் எதிர்காலம் பற்றிய பயத்தையும் தருகிறது.

'நிழலின் அருமை வெயிலில் தெரியும்' என்று என்றோ சொன்ன தமிழன் வாழ்க! ஒரு பொருள் நம்மிடமிருந்து பறிக்கப் படும் போதுதான் அதன் தேவை நமக்குத் தெரியும். நான் என் பள்ளிக் காலத்தில் 'கணையாழி' இதழில் ஒரு சிறுகதை படித்தேன். என் வாழ்வில் மறக்க முடியாத கதை. ஆசிரியர் யார் என்று கூட நினைவு இல்லை.

அன்று பொழுது விடிந்து வெகுநேரம் ஆகியும் சூரியனைக் காணவில்லை. மதியத்திலாவது வந்துவிடும் என்று எதிர் பார்த்து மதியமும் கழிந்தது. மேகமூட்டமாகக்கூட இல்லாதது சற்றே வித்தியாசமாய் இருந்தாலும், எல்லோருக்கும் வெயிலின் கொடுமையிலிருந்து தப்பித்த சந்தோஷத்தோடு முடிந்தது அன்றைய தினம்.

அடுத்த நாள் விடிந்தது இன்று வழக்கம் போல வெய்யில் காயப் போகிறது என்ற நம்பிக்கையில். பிற்பகல் ஆகியும் சூரியனைக் காணவில்லையே என்றதும் சிலருக்குக் கவலை வந்தது. மூன்றாவது நாளாய் அன்று சூரியனைக் காணாமல் சிலர் பயப்பட ஆரம்பித்த போது மீதிப் பேர் சொன்னார்கள், "என்ன இது?.. எங்கே போய் விடப் போகுது சூரியன்? " நான்காவது நாளாய் சூரியனைக் காணவில்லை. எல்லோருக்கும் கவலை வந்துவிட்டது. ஐந்தாவது நாளாய் சூரியனைக் காணாமல் அனைவரும் பதற ஆரம்பித்தனர், "ஐயோ.. யாரிடம் கேட்பது...யாராவது ஏதாவது செய்யுங்களேன்.." ஆறாவது நாள் பலர் கவலை, குழப்பம் காரணமாக நோயுறும் நிலைமையும் வந்தது.

இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துப் போனது. அலுவலகங்கள், பள்ளிகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், போக்குவரத்து, மருத்துவமனைகள் எல்லாமே இயக்கமற்றுப் போயின. எல்லோர் மனதிலும் ஒரே எண்ணம் 'சூரியனுக்கு என்ன ஆயிற்று?'. மேலும் ஒரு நாள் கழிந்தது. 'ஐயோ.. சூரியன் இல்லாவிட்டால் வாழ்க்கை இல்லை போலிருக்குதே!....' மேலும் ஒரு நாள் சூரியன் இல்லாதது அதை உறுதிப் படுத்தியது. 'இதற்கு மேல் சூரியன் இல்லாமல் சமாளிப்பது கஷ்டம்'.

அடுத்த நாள் காலை, லேசாக முகம் காட்டிய சூரிய வெளிச்சம்.... ஊரெல்லாம் கோலாகலம்...... சற்று நேரம் கழித்து வெளியில் வந்தே விட்டது சூரியன். உயிர்த்தெழுந்தது ஊர். நோய், கவலை, குழப்பம் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு கட்டியது சூரியனின் வருகை. அன்று முழுவதும் எல்லோர் முகத்திலும் பூரிப்பு, 'சூரியனின் கருணை' பற்றியே பேச்சு, 'இனி கவலை இல்லை, சூரியன் வந்தாயிற்று, நம் வாழ்க்கை காப்பாற்றப் பட்டது'. அடுத்த நாள் விடிந்தது சூரியனுக்கு நன்றி தெரிவித்தலோடு. எல்லோரும் மகிழ்ச்சியோடு புறப்பட்டனர் தங்கள் வேலைகளைப் பார்க்க.


அடுத்த நாள் காலை 'சூரியன் வந்து விட்டதா, நல்லது'... அடுத்த நாள், "ஐயோ.. இத்தனை நாள் இந்த சூரியன் வராததால் வேலை எவ்வளவு சேர்ந்து கிடக்கிறது?... ச்சே...." அடுத்த நாள் சூரியன் வந்ததா என்று பார்க்கக் கூட யாருமில்லாமல் வேலைப்பளு. அதற்கப்புறம் வந்த நாட்களில் சூரியனைப் பற்றி நினைப்பதற்கு யாருக்கும் நேரம் இல்லை.

 இப்படி முடிந்திருக்கும் அந்தக் கதை. கதையின் தலைப்பு "பகற்கொள்ளை".

வியாழன், 28 ஜூலை, 2011

அடி பைப்பு

அடி பைப்பு என்றால் எதைக் குறிக்கும் என்று இன்றைய 'செல் ஃபோன் தலைமுறை'க்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அதிலும் சென்னை போன்ற பெருநகர வாசிகளுக்கு. கிராமங்களில் இன்னும் இந்த வார்த்தை புழக்கத்தில் உள்ளதா என்று தெரியவில்லை.(நான் கிராமங்களை விட்டு வெகுதூரம் வந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது) ஏனென்றால், கிராமங்களில் இப்போது 'அடி பைப்பு' இல்லை என்றே நினைக்கிறேன்.

பள்ளி விடுமுறையின் போது  கிராமத்தில் இருக்கும் என் பாட்டி வீட்டுக்குப் போகும் ஒவ்வொரு முறையும், சிறு பிள்ளைகள் எல்லோருக்கும் வீட்டின் எதிரில் இருக்கும் அந்த அடி பைப்பில் நீரில் விளையாடுவது எவ்வளவு மனதுக்குகந்த ஒரு விளையாட்டாக இருந்தது என்பதைப் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் நல்ல தண்ணீருக்காக ஒவ்வொரு தெருவிலும் ஒரு அடி பைப்பு இருந்தது.(இப்போது சென்னையின் பல தெருக்களில் ஒரு தண்ணீர் குழாய்  கூட இல்லை -வழிப்போக்கர்களின் தாகம் தீர்க்க..)

வெய்யில் காலங்களில் அந்த அடி பைப்பைச் சுற்றிலும் தேங்கியிருக்கும் தண்ணீரில் படுத்து  மாடுகளோ  நாய்களோ இளைப்பாறுவதைப் பார்த்திருக்கிறேன். விடியற்காலை நேரங்களில் அடி பைப்பின் அந்த 'க்கீச்.. க்கீச்' ஒலியில் தான் பொழுது விடிந்து விட்டது என்று கண் விழித்திருக்கிறேன். தண்ணீர் மட்டம் குறைந்து விடும் உச்சி வெய்யில் காலங்களில் பைப்பின் குழாயை ஒரு கையால் பொத்தி மூடிக் கொண்டு, மேற்புறம் உள்ள துளையில் சிறிது நீர் ஊற்றிய பின் விடாமல் அடித்துத் தண்ணீர் மட்டம் மேலேறியதும் பாத்திரத்தில் நிறைத்துக் கொள்வது ஒரு தனி கலை.

என் தாத்தா குடிக்கத் தண்ணீர் கொண்டு வரச் சொல்லும் போதெல்லாம், அவருடைய பெரிய சொம்பை எடுத்துக் கொண்டு கூட விளையாடிக் கொண்டிருந்தவர்களில் யாராவது ஒருவரை உதவிக்குக் கூட்டிக் கொண்டு( "நீ பைப்பை அடி... நான் சொம்பில் தண்ணீர் பிடிச்சுக்கறேன்..") போய் 'சுடச் சுட'  பைப்பை அடித்துக் குளிர்ந்த நீரைத் தாத்தாவுக்குக் கொடுத்திருக்கிறேன்.
என் தாத்தா வளர்த்த புறாக்களில் ஒன்று, தினமும் காலையில் அந்த அடி பைப்பு தண்ணீரில் குளித்து விட்டுச் சிறகுகளை வெய்யிலில் காய வைத்து விட்டு வந்து தாத்தா குடிக்கும் காபியில் பங்கு கேட்டு குடிக்கும் என்று அம்மா சொல்லக் கேட்டு வியந்து இருக்கிறேன்.

பெரியவர்கள் யாரும் பார்க்காத நேரத்தில் ஓடிப் போய் அடி பைப்பை அடித்து தண்ணீரை மேலே ஊற்றி விளையாடி அம்மாவிடம் மாட்டிக் கொண்டு திட்டு வாங்கி தாத்தா, பாட்டி பரிந்து பேசி எங்களை அணைத்துக் கொண்ட நாட்கள் இன்னும் என் நினைவில் இருக்கின்றன.

 என் பாட்டி வீட்டில் கழித்த என் சிறு வயது நாட்களில் அந்த அடி பைப்பு ஒரு விளையாட்டுத் தோழனாகவே இருந்தது புரிகிறது. லேசாக இரும்பின் வாசம் வீசும் குளிர்ந்த அந்த அடி பைப்புத் தண்ணீரின் சுவைக்காக மனசு ஏங்கும் சில நிமிஷங்களில் நினைவு வருகிறது நெல் வயல்களின் வாசம் வீசும் அந்த கிராமத்தில் நிறைந்திருந்த அழகும் அன்பும்.

எப்போதாவது கிராமத்திலிருந்து அப்பா, அம்மாவைப் பார்க்க வரும் சொந்தங்களைப் பார்க்க நேரும் போதெல்லாம் அவர்களிடம் கேட்கிறேன், "அந்த அடி பைப்பில் இன்னும் தண்ணீர் வருதா?"