நன்றாக விடிந்துவிட்ட போதிலும் வானம் முழுவதும் மேகம் மூடியிருப்பதால் சூரிய ஒளியையே காணவில்லை. வழக்கம் போல என் பால்கனியில் நான். சில நேரங்களில் மட்டுமே காற்று வரும் என் பால்கனியை நான் மிகவும் விரும்புவதற்கு ஒரு காரணம், அது என் குழந்தைப் பருவத்தின் இனிமையான பொழுதுகளைப் பற்றிய நினைவுகளைப் பெரும்பாலும் ஞாபகப்படுத்துவதுதான்.
சென்ற சில நாட்களில் கிடைத்த மழைத்தூறல்களால் எல்லா மரங்களிலும் பசுமையான புதிய இலைகள் காற்றில் லேசாக அசைந்து கொண்டிருந்தன. சற்று தூரத்தில் ஒரு வேப்ப மரத்தின் பின்னாலிருந்து கிளம்பிய புகை என் கவனத்தை ஈர்த்தது. ஏதாவது குப்பைகளை எரித்து விட்டிருப்பார்கள். ஆனால், ஏனோ எனக்கு சிறு வயதில் கிராமத்தில் என் பாட்டி நெல் அவிக்கும் வாசனை நினைவுக்கு வந்தது. அது ஒன்றும் அவ்வளவு இனிமையான வாசனை இல்லை என்றாலும், குழந்தைப் பருவ அனுபவங்கள் என்றும் இனிமையானவை இல்லையா? உண்மையில் அந்த சிறு வயதில் அது எனக்கு மிகவும் பிடித்த வாசனைகளில் முக்கியமான ஒன்றாகவே இருந்திருக்கிறது. அதற்குக் காரணம் என் பாட்டியின் அருகாமையும் அவர் சொன்ன கதைகளும். இரவு முழுவதும் நெல் அவித்துக் கொண்டு இருக்கும் பாட்டிக்கு அருகில் அமர்ந்து விடியத் துவங்கும் பொழுதுகளில், லேசான குளிரில் அடுப்பு எரிப்பதற்கு வைக்கோல் குவியலில் இருந்து சிறிது சிறிதாக வைக்கோலை அடுப்புக்குள் நகர்த்தி விட்டுக் கொண்டே கேட்ட கதைகள் அதிகம் நினைவில்லாத போதும் அந்த அனுபவமும், நெல் அவிக்கும் வாசனையும் என் மனதில் அப்படியே பதிந்து இருப்பதை என்னால் உணர முடிகிறது.
சில சமயம், சில வாசனைகள் ஏதேதோ பழைய நினைவுகளை ஞாபகப்படுத்துவது இன்று வரை எனக்கு ஒரு இனிமையான ஆச்சரியமாகவே இருந்து வருகிறது. வீதிகளில் நடந்து செல்லும் போது, ஏதோ ஒரு வீட்டிலிருந்து வரும் பூண்டு குழம்பு வாசனையில், 'அட, இங்கே யாரோ நம்ம ஊர்க்காரங்க இருக்கிறாங்க போல இருக்குதே...' என்று மனசு சொல்லும். வேலையில் ஆழ்ந்து இருக்கும் போது திடீரென்று வரும் மண் வாசனை, வெகு தூரம் செல்லும் பேருந்தின் ஜன்னலோரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் பொழுதுகளில் சில கிராமப்புறங்களைக் கடக்கும் போது வரும் பசுமையான நெல் வயலின் வாசனை, மாவு மில்லில் தீபாவளிப் பலகாரங்களுக்கு மாவு அரைக்கும் வாசனை, கடுகு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கும் வாசனை, சிறு வயதில் ரொம்பப் பிடித்த என் சித்தி போட்டுக் குளிக்கும் மைசூர் சாண்டல் சோப்பின் வாசனை..... இப்படி இன்னும் எத்தனையோ.... குழந்தைப் பருவ ஞாபகங்களைத் தூண்டும் பல வித வாசனைகள்..... அவற்றை இப்போதும் எப்போதாவது, எங்கேயாவது நுகர நேர்வது, இந்த இயந்திர வாழ்க்கையில் வேகமாக ஓடிக் கொண்டு இருக்கும் காலத்தை ஒரு சில கணங்கள் நிறுத்தி விடுகிறது. சலித்து, மரத்துப் போன மனசுக்கு கொஞ்சம் நினைவு வருகிறது புன்னகை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக