ஞாயிறு, 24 ஜூலை, 2011

மர நினைவுகள்

சிறு வயதிலிருந்தே மரங்களோடு உணர்வு பூர்வமாக இணைந்திருக்கும் என்னால் உருவத்தில் பெரியதாய் இருப்பதால் மரங்களைத் தாவரங்கள் என்று அழைக்க முடிவது இல்லை. என்ன தான் அறிவியல் படித்தாலும் கடவுள் தான் தன்னைப் படைத்ததாக நம்பும் பலரைப் போல என் மனது மரங்கள் தாவர இனத்துக்குள் வகைப்படுத்தப் பட்டிருப்பதை அறிவியல் பாடத்தில் படித்திருந்தாலும் தினசரி வாழ்வில் மரங்களைத் தாவரங்கள் என்று அழைக்க மறுக்கிறது. ஏனோ தாவரம் என்ற வார்த்தை செடி, கொடிகளை மட்டுமே குறிப்பது போல் தோன்றுகிறது.

நான் முதன் முதலில் பார்த்த மரம் எது என்று நினைவில்லை. யோசித்துப் பார்த்தால் சிவந்த மலர்களை உதிர்க்கும் ஒரு பெரிய கொன்றை மரம் என்றே தோன்றுகிறது. என் கண்களுக்குள் அடக்க முடியாத அளவு பெரிய மரம். நாங்கள் வசித்த மாடிக் குடியிருப்பின் வாசற்புறம் பெரிதாய் நிழல் பரப்பியிருந்தது. நான் முதன் முதலாய் அடி வைத்து விளையாடிய மண் அதுதான். அப்புறம் அப்பா வளர்த்திருந்த சிறு தோட்டத்தில் இருந்த வாழைமரங்கள்.

என் அப்பா பிறந்த ஊரில் தாத்தா வீட்டுத் தோட்டத்தில் இருந்தது வீட்டை விடப் பெரிய அந்த மாமரம். தாழ்வாகக் கிளைகள் பரப்பி ஒவ்வொரு கோடையிலும் பழங்களால் நிறைந்து நின்ற அந்த மரத்தில் அப்பா கட்டித் தரும் கயிற்று ஊஞ்சலில் விளையாட அண்ணன், அக்காவோடு போட்டி போட்டது ஞாபகம் இருக்கிறது.

அப்புறம், அம்மா பிறந்த ஊரில், தாத்தா வீட்டு எதிரில் இருந்த பனை மரங்கள் நடுவில் விளையாட்டுத் தோழர்கள், அக்கா, அண்ணன் மற்றும் சித்தியோடு பனம்பழம் சுட்டு சாப்பிட்டதும், ரொம்ப நேரமாக எங்களைக் காணாமல் தேடிக் கொண்டு இருந்த தாத்தாவிடம் திட்டு வாங்கியதும்..... இன்னும் அந்த சுட்ட பனம்பழத்தின் வாசனை என் மனதோடு இருக்கிறது. அங்கே ஆற்றின் அக்கரையில் வரிசையாக நிற்கும் தேக்கு மரங்கள். பேருந்தில் செல்லும் போது அந்த வரிசையைப் பார்த்ததும் பாட்டி மடியிலிருந்து எழுந்து குதிக்க ஆரம்பித்து விட்டுவேன், "ஊர் வந்தாச்சு.... ஊர் வந்தாச்சு...".

என் ஆரம்பப் பள்ளியில் இரண்டு வேப்பமரங்கள். உதிர்ந்த இலைக்கொத்துக்களில் இலைகளை நீக்கி விட்டு காம்புகளைச் சேர்த்து துடைப்பமாகக் கட்டி மரத்தடியைப் பெருக்கிச் சுத்தம் செய்வது எங்கள் பெரும்பாலோரின் விருப்பமான வேலையாக இருந்தது. என் வீட்டுத் தோட்டத்தில் இரண்டு பெரிய தென்னைகளோடு ஒரு நெல்லி மரமும், கொய்யா மரமும் இருந்தது. அனில்கள் குதித்து குதித்து நெல்லிப்பூக்களை எல்லாம் உதிர்த்து விடுவதும், பெரியதாகிப் பழுக்கட்டும் என்று விட்டு வைத்திருக்கும் கொய்யாப் பழங்களைக் குடைந்து சாப்பிட்டு விடுவதும் வழக்கம்.

அப்புறம், மறக்க முடியாதது அண்ணாவின் பள்ளியில் இருந்த அமானுஷ்ய மணமும், அழகும் வாய்ந்த பூக்கள் பூக்கும் நாகலிங்க மரம். அந்தப் பூவைத் தொடுவதற்கு நான் பயந்ததும், அதன் வடிவமைப்பைப் பார்த்து இது பூ தானா என்று வியந்ததும் இன்றும் நான் என்றாவது நாகலிங்கப் பூக்களைப் பார்க்க நேர்ந்தால் நினைவு வருகிறது.

நான் சிறு வயதில் பார்த்ததால் இந்த மரங்கள் ரொம்பப் பெரியதாய்த் தெரிந்ததை நான் வளர வளர உணர்ந்த போதிலும், மரங்களின் பிரம்மாண்டத்தை நான் உணர்ந்து பிரமித்துப் போனது, பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயத்தில் பார்த்த 400 வருடங்களுக்கும் அதிகமான வயதுடைய 'கன்னிமரா' தேக்கு மரம் தான்.


ஏழெட்டு பேர் சேர்ந்து கைகோர்த்தால் தான் அந்த மரத்தின் சுற்றளவை அளக்க முடியும்.
 
எத்தனை வயல்கள் இருந்தாலும் நெல் வயல்கள் தனி அழகுடன் என் மனதைக் கவர்ந்து விடுவது போல் எத்தனை மரங்கள் இருந்தாலும் வேப்ப மரங்கள் மட்டும் பார்த்த மாத்திரத்தில் எனக்கு என் சொந்தஊரில் இருப்பது போன்ற உணர்வைக் கொடுப்பவை.

தன்னோடு கூட வளர்ந்த தன் தோட்டத்து மரத்தை தன் சகோதரியாகப் பாவித்ததால் அதன் முன் தன் காதலனோடு தனித்திருக்க வெட்கப் பட்ட அந்த முகம் தெரியாத சங்க காலத் தலைவியை நினைவு கூர்கிறது மனம். அப்படிப் பட்ட மனமுடைய சமூகமே தொடர்ந்து இருந்தால் இப்போது போர்க்குரல் எழுப்பத் தேவையிருந்திருக்காது, "மனிதனே, மரங்களைக் காப்பாற்று".

கருத்துகள் இல்லை: